உள்நாட்டு

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – மற்றுமொரு பணிப்பாளருக்கு பிணை!

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அக்கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் மற்றுமொரு பணிப்பாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் மற்றுமொரு பணிப்பாளரான பண்டுல வீரசேகர இன்று (23) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போது கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன், சந்தேகநபர் வழக்கின் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும், அவரை சந்தேக நபராக பெயரிடுவதற்காக அவருக்கு எதிராக போதுமான விடயங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றில் கோரியிருந்தார்.

மேலும், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பது தொடர்பில் எதிர்ப்பு இல்லை என பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேகநபருக்கு எதிராக போதுமான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் அவரை வழக்கின் நான்காவது சந்தேகநபராக பெயரிட்டு உத்தரவிடடார்.

பின்னர் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பிணையாளர்களில் ஒருவர் சந்தேகநபரின் உறவினராக இருக்கக்கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், சந்தேகநபரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இலங்கையின் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு அறிவிக்குமாறும் சந்தேகநபர் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கை ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top