உள்நாட்டு

காணி உறுதி இருந்தும் சொந்தக் காணிக்குள் செல்லவிடாமல், விவசாயம் செய்ய தடுப்பது தாயையும், சேயையும் பிரிப்பதற்கு சமனாகும் -முஷாரப் எம்.பி பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பு

காணி உறுதி இருந்தும் சொந்தக் காணிக்குள் செல்லவிடாமல், விவசாயம் செய்ய தடுப்பது தாயையும், சேயையும் பிரிப்பதற்கு சமனாகும் -முஷாரப் எம்.பி பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பு

(எஸ்.எம்.அறூஸ் – அட்டாளைச்சேனை விசேட நிருபர்)
தேசிய நலன்சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கடலரிப்புக்களால் காணிகளை இழந்த உரிமையாளர்களுக் கு, இழப்புக்கேற்ற கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டுமென,பாராளுமன்ற உறுப்பினர் முதுநபீன் முஷர்ரப் தெரிவித்தார்.
காணி உரிமைகள் திருத்தச்சட்ட மசோதாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது;
அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கடலரி ப்புக்களால் காணிகளை இழக்கும் உரிமையாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில், நாம் தவறிழைக்கிறோம். கடின உழைப்பு,அர்ப்பணிப்பு,சேமிப்புக்களாலே,ஒருவர் காணிக்குச் சொந்தக்காரராகிறார் இவ்வாறானவர்களின் காணிகள், இழக்கப்படும் பொழுது, உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படுவதில்லை. 


ஒலுவில் துறைமுக அபிவிருத்தித் திட்டமானது இப்பிரதேச மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என நம்பப்பட்டது. அது மக்கள் மத்தியிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு என சிலரது காணிகளை அரசாங்கம் சுவீகரித்துக் கொண்டது. இன்னும் கடலரிப்பாலும் இங்கு சிலர்,காணிகளை இழந்துள்ளனர்.என்றாலும், நீண்டகால கோரிக்கைகள், காத்திருப்புக்களின் பின்னர் காலம்தாழ்த்தியே இவர்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்ட ன. 
ஆர்ப்பாட்டம், போராட்டமென கடுமை யாகப் போராடிய பின்னர்தான்,  பதிலீடுகள் வழங்கப்பட்டன. அதுவும் நேர்த்தியானதாக இல்லை.இழக்கப்பட்ட ஏக்கர்களுக்கு ஏற்ப பதில்காணிகள் வழங்கப்படாது, சகலருக்கும் ஒரேயளவில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. 
அங்கு நீதியானதொரு நஸ்ட ஈடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இன்னும் நிலவுகின்றது. இதனால் உரிய வகையில் நஸ்டஈடு வழங்கப்படுவதுடன், இதுவரை நஸ்டஈடு கிடைக்கப்பெறாதவர்களுக்கும் நஸ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு,வழங்கப்பட்ட காணிகளுக்கு இன்னும் உரித்துரிமையும் வழங்கப்படவில்லை. இது இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நீடிப்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். பிராந்தியத்துக்கே  பெரும் நன்மையளிக்கும் என, எதிர்பார்த்த  ஒலுவில் துறைமுகத்தால் இம்மக்கள் அடைந்த இலாபமிதுதான். 
தனியார் காணிகள் சுவீகரிக்கப்படும்போது சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டு காணிச் சொந்தரக்காரர்கள் திருப்திப்படும் அளவிற்கு தீர்வினை வழங்க வேண்டும் என்பதற்காக  திருத்தச்சட்டத்தை முன்மொழிந்துள்ள காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அம்பாரை மாவட்ட விவசாயிகளின் சவால்கள் இதுபோன்று பலதுள்ளன.
வேகாமம்,வட்டமடு,கிராங்கோ, பொன்னன்வெளி, பாவா புரம்,அம்பலம் ஓயா,அஷ்ரப் நகர்,கனகர்வெளி போன்ற காணிகளில்,விவசாயம் செய்வதிலும் சிக்கல்கள் நிலவுகின்றன. போதிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி,விவசாயம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.பாய்ச்சல் வசதிகள் போதாது என்பதற்காக, சிலருக்கே விவசாயம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. 
இதனால்,சிலர்,மழையை நம்பியும், எதிர்பார்த்தும் விவசாயம் செய்துள்ள னர். இப்போது வழங்கப்படும் சேதனைப் பசளைகளும் மழையை நம்பி செய்கை யில் ஈடுபட்டோருக்கு மறுக்கப்படுகின் றன.காரணம் கேட்டால்,அனுமதியின்றி விவசாயம் செய்துள்ளதாகவும், கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
இன்று நாட்டில் பசளை விடயம் புதாகரமாக மாறியுள்ளது.நாட்டிலே இயற்கைப் பசளை பயன்படுத்துவதை எவராலும் பிழை என்று சொல்ல முடியாது. இயற்கையாக பசளை பயன்படுத்தப்பட வேண்டும். உணவுகள் நஞ்சாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக எல்லோரும் பேசி வருகின்ற நலல்தொரு திட்டத்தினை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
1970ம் ஆண்டுகளில் உற்பத்திப் பொருளாதாரம் மேலோங்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு உற்பத்தி இறக்குமதி குறைக்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதமர ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவினால் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டமும் தவறானது என்று யாரும் சொல்ல முடியாது.
ஆனால் அந்தத் திட்டங்களைக் கொண்டு வருகின்றபோது, அதனை நடைமுறைப்படுத்துகின்றபோது  நடைமுறைப் பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு அதனை செயற்படுத்துவது அவசியமானதாகும்.
பொத்துவில் பிரதேசத்தில் சுமார் 4000 ஏக்கர் காணிகள் ஆரம்பக் கூட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்பதற்காக இதுவரை  பசளை வழங்கப்படவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும். 

வானத்தை நம்பி, மழையை நம்பி பயிர் செய்த மக்கள் பயிரை விளைவித்த நிலையில் ஆரம்பக் கூட்டத்தில் உள்வாங்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு பசளை வழங்காமல் இருப்பது நாட்டின் தேசிய வருமானத்தில் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அரசாங்கம் இவற்றில் கவனம் செலுத்தி சகலருக்கும் பசளை வழங்க    நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், திட்டங்களுக்கென சுவீகரிக்கப்பட்ட காணிகள் சிலவற்றில் எந்த,அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, காடுகள் வளராதுள்ள இந்தக் காணிகளை உரிமையாளரிடம் மீள ஒப்படைப்பதே சிறந்தது. 


உரிமையாளர்கள் காணிக்குரிய ஆவணங்களை வைத்திருக்கின்ற நிலையில் காணி காணியாகவே இருக்கின்றது. காடாக இல்லை. வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரித்து  அந்தக்காணிக்குள் போகவிடாமல், காணியை செய்ய செய்யவிடாமல் விவசாயிகளைத் தடுப்பதென்பது ஒரு தாயயையும் சேயையும் பிரி்ப்பதற்கு சமனாகும்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி அவர்களையும் பாராட்ட வேண்டும்.சுவீகரித்து,கைவிடப்பட்ட காணிகளில்,காடுகள் வளராதிருந்தால், அவற்றை மீள ஒப்படைக்கும்படியே ஜனாதிபதியும் கூறுகிறார். ஆனால் பல ஏக்கர் காணிகள் மீளவும்இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் மிகக் கவலைக்குரிய விடயமாகும். நாட்டில் நிலவும் கொரோனா நிலமை காணமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் இல்லாமலும் இருக்கலாம்.
இது கிழக்கு மாகாணத்திலும், அம்பாரை மாவட்டத்திலும்  பெரியளவில் நடக்கவில்லை  என்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.


 எனவே,இவ்விடயங்கள் தொடர்பில் காணி அமைச்சர் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


காணிக்குரிய ஆவணங்களைக் கொண்டிருக்கின்றவர்களுக்கு  காணிகளை வழங்கி ஆவணங்களை சரிபார்த்து அவர்களுக்கான உறுதிப்பத்திரங்களையும் வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிக்கக்கூடிய வாய்ப்பினையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top