அரசியல்

ஹக்கீமும், அவரது சகோதரர் ஹஸிரும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறலாம்.

கட்சியிலிருந்து வெளியேறிய அனைவரும் துரோகிகளா ? நியாயம் கோருகின்ற போராளிகளால் தலையிடியா ? சலுகைக்கான அழைப்பை ஏன் புறக்கணித்தோம் ?

இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஏராளம். அவர்கள் சார்பாக என்னதான் நியாயம் இருந்தாலும், சிந்திக்க தெரியாத போராளிகளின் பார்வையில் அவர்கள் அனைவரும் துரோகிகளே !

பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒரே பட்டியலில் உள்ளடக்க முடியாது. அதாவது பதவி, அதிகாரம், பணம் போன்றவற்றுக்காக கட்சியை காட்டிக்கொடுத்தவர்கள் துரோகிகள்.

அதேநேரம், கட்சியால் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டு அல்லது வேண்டுமென்று தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட விரக்தி, தலைமைத்துவ நடவடிக்கைகளில் உள்ள அதிருப்தி மற்றும் வெட்டுக்குத்து, அநீதி காரணமாக வெளியேறியவர்களும் உள்ளார்கள்.

எது எப்படி இருப்பினும் கட்சியைவிட்டு ஒருவர் வெளியேறினால் ஏன் வெளியேறுகிறார் ? அவரது பிரச்சினை என்ன ? என்று ஆராந்து அவரது வெளியேற்றத்தினை தடுத்து நீதியான தீர்வு வழங்கும் நிலை ஒருபோதும் முஸ்லிம் காங்கிரசில் இருந்ததில்லை.

மாறாக எதுவும் தெரியாத அப்பாவி போன்று தனக்கே உரித்தான அழகான புன்னகை மட்டுமே வெளிப்படும். அந்த புன்னகைக்கு பின்னால் உள்ள அரசியல் பற்றி அறியும் ஆற்றல் போராளிகளிடம் இல்லை.

அதுபோலவே எங்களையும் வெட்டிக் குத்தி ஓரம்கட்டினால் நாங்களும் வேறு கட்சிக்கு சென்றுவிடுவோம். அதன்பின்பு எங்களையும் துரோகி பட்டியலில் சேர்த்துவிட்டு கதையை முடிக்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோன்று எதுவும் நடக்காததனால் பெருத்த தலையிடி ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது எங்களது கட்சி. இது தனிப்பட்ட எவரது குடும்ப சொத்தும் அல்ல. இதற்காக ஏராளமான அற்பனிப்புக்களை செய்திருக்கிறோம். இது தலைவரிடமும், சகோதரரிடமும் நல்ல பெயர் எடுக்க நினைப்பவர்களுக்கும், கால் ஊண்டி கடைக்கு போகின்றவர்களுக்கும் புரியாது.

நாங்கள் வயிற்று பிழைப்புக்காகவோ, சமூகத்தின் பெயரால் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து ஏப்பமிட்டவர்களிடம் நக்கு தின்பதற்காகவோ, பணம், பதவி மற்றும் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்தினை பெறுவதற்காகவோ கட்சி நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

அவ்வாறான சுயநலவாதிகளாக நாங்கள் இருந்திருந்தால், கடந்த நல்லாட்சியில் வர்த்தக அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீனிடமிருந்து ஏராளமான அழைப்புக்களும், சலுகைகளும் காண்பிக்கப்பட்டது. சலுகைகளை பெற்றுக்கொண்டு அவருடன் இணைந்திருக்கலாம் ஆனால் அவைகள் அனைத்தையும் புறக்கணித்தோம்.

எங்களது நேர்மையான மனோநிலை பற்றி அறிந்துகொள்ளும் ஆற்றல் சமூகத்தின் பெயரால் கொள்ளை அடித்து ஏப்பமிடுபவர்களிடமும், நக்குத் தின்னிகளிடமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவேதான் நாங்கள் தொடர்ந்து எங்களது கட்சியிலேயே பயணிப்போம். விருப்பம் இல்லையென்றால் தலைவரும், சகோதரரும் வெளியேறி செல்லலாம்.

ஆனால் தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. நீதியை நிலைநாட்டும் நோக்கில் அநீதிகளை மக்கள் மன்றுக்கு சமர்ப்பிப்போம். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஆதாரமில்லாமல் விமசிக்கமாட்டோம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top