(mufassir bin jahfar)
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்ற, கிணற்றுத்தவளை அரசியல் செய்கின்ற சில அற்பசிந்தனையுள்ள, அரசியல்வாதிகள் எனத் தங்களை இன்னும் கூறிக்கொண்டு திரிகின்றவர்களின் வீண்புரளிகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரு பதிவு இது.
இலங்கை என்பது பல இன, மத, மொழிபேசும் மக்களை கொண்ட நாடு. இந்த நாட்டின் சிறந்த எதிர்காலம் என்பது இந்தப் பல்வகைத்தன்மை கொண்ட மக்களின் ஒற்றுமை, புரிந்துணர்வு, நம்பிக்கை, சகிப்புத்தன்மை போன்றவற்றின் அத்திவாரத்தின் மீது கட்டியெழுப்பப்படவேண்டிய ஒன்று.
இயல்பிலேயே இந்நாட்டு மக்கள் அனைவரும் இத்தகைய பண்புகளைக் கொண்டவர்களாகவே உள்ளனர். ஆனால் தங்களைப்போன்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்ற அரசியல்வாதிகள் அம்மக்களிடையே இனவாதத்தை தூண்டி விடுவதன் மூலம் உங்களின் வாக்கு வங்கிகளைத் தேடுவதற்கான உத்திகளினால் சின்னாபின்னப்பட்டுச் சிதறுண்டு போய்க்கொண்டிருப்பது கண்கூடு.
இனவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம் என நீங்கள் தூக்கிப்பிடித்த ஆயுதம் இன்று உங்களையே குத்தி கொத்துயிரும் கொலையுயிருமாய் போட்டிருக்கின்ற சூழ்நிலையிலும் நீங்கள் மூட்ட நினைக்கின்ற இந்த இனவாத, பிரதேசவாதத் தீ மீண்டும் உங்களையே கருக்கும் என்பதில் சநரதேகம் இல்லை.
எமது நாட்டைப் பொறுத்தவரை இனவாதத்தை யார் பேசினாலும் அதை இனிமேலும் அங்கீகரிக்க முடியாது. அது நாட்டை மேலும் அழிவை நோக்கியே நகர்த்தும்.
இலங்கை தேசத்தில் பல்வகைத்தன்மைக்கு எடுத்துக்காட்டான ஓர் ஊர் என்றால் அது பொத்துவில்தான். அந்த ஊரினை ஒரு முன்மாதிரியாகக் கட்டியெழுப்பிக்காட்டுவது இந்த நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக நிச்சயம் அமையும்.
நீங்கள் கனவு கண்டுகொண்டிருந்த பொத்துவில் மக்களின் வாக்குகளும் பறிபோன நிலையில் நீங்கள் நெஞ்சுடைந்து அழுது புலம்புவது mind voice ஆக இருந்தாலும் உங்களின் அடிப்படையற்ற முகநூல் பதிவுகளில் ரொம்ப சத்தமாகவே கேட்கிறது.
ஆனால் பொத்துவில் மக்களும் அவர்களின் பிரதிநிதியும் தங்களின் நிலைப்பாட்டில் மிகத்தெளிவாகவே உள்ளனர்.
பொத்துவில் என்பது மிக நீண்டகாலமாக மூன்று இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஊர். நீங்களும் நீங்கள் ஊறிய அதே குட்டையில் ஊறிய மட்டைகளும் செய்த ஊனமான அரசியலினால் அந்த ஊர் மிகவும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்பதே வரலாறு.
எவ்வளவோ வளங்கள் நிறைந்த அந்த மண்ணை உங்களின் சில்லறை அரசியலுக்காகப் பயன்படுத்திய காலங்களில் அம்மக்கள் பெற்ற நண்மைகளை முடிந்தால் பட்டியலிட்டுத்தாருங்கள்.
நாங்களும் பட்டியலிட்டு தருகிறோம் நீங்கள் செய்த அநீதிகளையும், புறக்கணிப்புக்களையும். உங்கள் விபச்சார அரசியலை இனியும் இங்கே விலைபேச வராதீர்கள்.
எங்கள் ஊர் அனைத்துத் துறைகளிலும் மீண்டும் மீள்கட்டமைக்கப்படுகிறது. அதற்கான சகல நியாயமான முயற்சிகளும் எமது பிரதிநிதியால் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகிறது. எமது மக்களின் ஒற்றுமை என்ற அத்திவாரத்தில்தான் இம்மண் வளம் பெற முடியும் என்பதை மிகவும் நம்புபவர் எமது பிரதிநிதி.
எமது பிரதிநிதியின் செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவர். ஏன்! நீங்களும் அதனை நன்கு அறிவீர்கள். அதனால்தான் நீங்கள் அடையும் பதற்றத்தின் அதிர்வுகள் அடிக்கடி எங்களின் காதுகளுக்கும் கேட்கின்றன.
உங்களின் முதலைக்கண்ணீர்பற்றி மக்கள் நன்கு அறிவர். ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள் உங்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து நாளாயிற்று.
நீண்டகாலமாகத் தேங்கிக்கிடக்கின்ற எமது மக்களின் பி்ரச்சினைகளை வீதிகளில் அரைநிர்வாணப் போராட்டம் நடாத்தி தீர்க்க முடியாது என்பதையும் அதனை முறையாக எவ்வாறு தீர்க்க முடியும் என்பதனையும் நீங்கள் விரைவில் கற்றுக்கொள்வீர்கள்.(கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்). இத்தனை நாளும் நீங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவிகள் செய்ததில்லை.
உங்களுக்கு நாங்கள் கடந்த காலங்களில் அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாக ஒன்றை மட்டும் கேட்கிறோம். தயவு செய்து எங்களது தீர்வு மிக்க பயணத்தில் உபத்திரவம் செய்யாதீர்கள்.
