இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி இன்று முடிவு பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆக அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் (121), டேவிட் மலான் (70), பர்ன்ஸ் (61), ஹஸீப் ஹமீது (68) ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 432 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சிறப்பாக விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் காரணமாக இன்றைய நான்காவது நாள் போட்டி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. குறிப்பாக நேற்றைய போட்டியில் 91 ரன்கள் விளாசி இருந்த புஜரா இன்று மேலும் ரன்களை குவிக்காமல் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்த வெளியேறினார்.
அதன்பின்னர் விராட்கோலி ஓரளவு சுதாரித்து அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் அடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் காரணமாக இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலமாக இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற நிலையில் சமன் செய்துள்ளது. இந்த போட்டியின் 4ஆம் நாளான இன்று இந்திய அணி ஓரளவு சுதாரித்து இன்றைய போட்டியில் பெரிய ஸ்கோருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்தது.
குறிப்பாக நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இன்றைய போட்டியில் அடுத்த 63 ரன்களுக்கு மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
