Breaking News

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் – அலி ஷப்ரி எம்.பி.யிடம் வேண்டுகோள்

கௌரவ அலி ஷப்ரி எம்பி அவர்களுக்கு.

நீதி அமைச்சர் பதவியிலிருந்து தாங்கள் ராஜினாமா செய்தபோது நாட்டின் பொருளாதார நெருக்கடியால் தோன்றியுள்ள விலையேற்றம், தட்டுப்பாடு காரணமாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோர் உட்பட செய்வதறியாது மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த என் போன்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

பதவியைவிட நாட்டு மக்கள் அனுபவிக்கும் சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் அமைச்சரவை உறுப்பினர் என்ற ரீதியில் தானும் கூட்டுப்பொறுப்பு கூற கடமைப்பட்டவர் என்பதை எவரின் வற்புறுத்தலுமின்றி ஏற்றுக்கொண்ட தங்களது பொறுப்புணர்ச்சியை ஆழ்ந்த அவதானமுடைய ஒவ்வொரு இலங்கை பிரஜையும் மனதாற பாராட்டினார்கள்.

நீங்கள் தொடர்ச்சியாக பிரகடனிக்கும் ‘இலங்கையன்’ என்ற அடையாளத்தை துன்பப்படும் மக்கள் சார்பாக நிரூபித்துள்ளதாக பெரும்பான்மை மக்களும் பௌத்த பீடாதிபதிகளும் உணர்ந்தார்கள்.
பெருமிதப்பட்டார்கள்.

எல்லா முஸ்லிம் தலைமைகளும் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பவர்களல்ல என்பதை நிர்பந்தமில்லாத உங்கள் ராஜினாமா உரத்துக்கூறியது.

ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஓர்மித்து ராஜினாமா செய்வதற்கு உங்கள் ராஜினாமாவே உந்துதலாய் அமைந்ததை அரசியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.

வீதிகளில் மக்கள் விளையாட்டாய் நிற்கவில்லை என்பதை இந்த அரசுக்கு உணர்த்தியது உங்கள் ராஜினாமாதான்.

‘2022 மக்கள் எழுச்சியை’ முதல் முதலில் கௌரவப்படுத்தியவர் ஒரு முஸ்லிம் அமைச்சரே என்பதை வரலாறு இன்று பதிந்து கொண்டது.

சித்தப்பாவுக்கு பகரமாக உங்களுக்கு முன் நாமல் ராஜபக்ஷ் ராஜினாமா செய்தார்.
துன்பத்திலிருக்கும் மக்கள் சார்பாக தனது தார்மீக கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்திருக்கலாம்.

அந்த வகையில் நண்பனுக்காக நீங்கள் ராஜினாமா செய்வதுதான் தார்மீகம்.
செய்தும் விட்டீர்கள்.

உங்களைப்போன்றே எமது எம்பி முஷர்ரஃபும் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்று மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக இயங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

பெரும்பான்மை மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், இனவாத கெடுதிகளை குறைக்கவுமே நீங்கள் இருவரும் இந்த அரசுக்கு ஆதரவளித்தீர்கள்.

பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு உங்கள் இருவரில் எவரும் அரசுக்கு ஆதரவளிக்கவில்லை என்பதை முஸ்லீம் சமூகத்திலுள்ள அரை வேக்காடுகள் புரியாவிட்டாலும் நாம் நன்றாகவே புரிந்துள்ளோம்.

அடுத்த கட்டம் என்ன?

கோத்தாவை வீட்டுக்கு போ! என்று கோசமெழுப்பும் மக்கள்: எவரையும் மாற்றீடாக அடையாளப்படுத்தவில்லை.

மக்களுக்கு தேவை தீர்வுதான்.

யார் தீர்வை வழங்குகின்றார்களோ அவர்களையே மக்கள் தலைவர்களாக ஏற்பார்கள்.

அவர் எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பறவாயில்லை.

தற்காலிகமாவேனும் இனவாதத்தை நிராகரிக்கும் மனநிலைக்கு பெரும்பான்மையை ‘2022 மக்கள் புரட்சி’ கொண்டு வந்துள்ளதை நீங்கள் அறியாதிருக்க நியாயமில்லை.

ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெரும்பான்மை மக்களின் மனமாற்றத்தை நிரந்தரமாக்குங்கள்.

இக்கட்டான நேரத்தில் விட்டுச்செல்பவராக நீங்களும் ஆகிவிடாதீர்கள்.

கோட்டா குற்றம் செய்தவர்தான்.
ஜனாஸாக்களை எரித்தது மாபெரும் குற்றம்.
அதற்கான தண்டனையைத்தான் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்.
அதியுச்ச தண்டனை எதுவென இறைவன் தீர்மானிப்பான்.

தண்டனை வழங்குவதில் அவன் கடுமையானவன்.
அதேபோல் மன்னிப்பதிலும் அவன் நிகரற்றவன்.

ஆகவே நீங்கள் உங்கள் நட்பின் விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

Nation building எனும் புதிய அமைச்சை கேட்டுப்பெறுங்கள்.
நிதியமைச்சின் முழு அதிகாரமும் உடையதாய் அது இருக்க வேண்டும்.

எவரின் காலில் விழுந்தாயினும் பசி, பட்டணியால் இலங்கையில் அப்பாவி மக்களுக்கு ஏற்படவுள்ள பேரழிவை தடுக்க முயலுங்கள்.

சிங்கப்பூருக்கு ஓரு லீ குவான் யூ.
மலேசியாவுக்கு ஓரு மஹாதீர் முஹம்மத்.
இலங்கைக்கு ஒரு அலி ஷப்ரி என்று வரலாறு எழுதட்டும்.

இனவாதம் அடியோடு அழியட்டும்.

இறைவன் நாடினால் பெரும்பான்மை மக்கள் உங்கள் தலைமைத்துவத்தை பரவலாக ஏற்கலாம்.

இனவாதமற்ற செல்வச்செழிப்பான நாட்டை உருவாக்க முயலுங்கள்.

உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

‘பண்டிதராக இருந்தால்தான் பொருளாதாரத்தை மறுசீரமைக்கலாம் என்பது குறுட்டு நம்பிக்கை,
கூர்ந்து கேட்கும் மாணவனாலும்
சாதிக்கலாம் ‘ என்று நேற்று பாராளுமன்றத்தில் நீங்கள் கூறிய பொன் மொழியின் பேரால் வேண்டுகின்றேன்.

ஜனாஸாக்களை எரித்து துவம்சம் செய்தபோதும் இக்கட்டான நேரத்தில் உதவியது ஒரு முஸ்லிம்தான் என்பதை நாளைய வரலாறு ஊன்றி எழுதட்டும்.

-வஃபா பாறுக்-

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top