Breaking News

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

மாண்புமிகு தமிழக முதல்வரின் இலங்கைக்கான நேசக்கரத்திற்கு இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர் சட்டத்தரணி எம் எம் முஷாரப் அவர்கள் நன்றி தெரிவிப்பு

இலங்கை தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்டிருக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறையின் காரணமாக பாதிக்கப்பட்டு அவதியுறும் இலங்கை மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை தூத்துக்குடி துறைமுகம் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு தான் விரும்புவதாகவும் அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களை இந்திய தூதரகத்தின் ஊடாக விநியோகிப்பதற்கான அனுமதியினை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் அவர்கள் கோரியிருக்கும் செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.

அதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ எஸ் எம் எம் முஷாரப் நன்றி தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது, இலங்கைத் தேசம் எதிர்நோக்கி இருக்கும் இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மிக்க சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கான இந்த மனிதாபிமான உதவி காலத்தால் மறக்க முடியாத ஒரு உதவியாக இருப்பதுடன் இரண்டு நாடுகளுக்குமான நட்புறவில் முக்கியமான ஒரு திருப்பமாகவும் இதனை தான் நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து குறிப்பிடும் பொழுது இலங்கை இந்திய இராஜதந்திர ரீதியான நட்புறவு என்பது நீண்டகால பாரம்பரியமிக்க நட்புறவாக இருந்து வருகிறது என்பதற்கு தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சரின் இந்த இடர்க்கால மனிதாபிமானப் பேருதவி முக்கியமான ஒரு சான்றாகும் எனவும் இலங்கை தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் இந்த பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தின் பல்வேறு வகையான பொருளாதார உதவிகளுக்கான நேசக்கரம் நீட்டப்பட்டு அவ்வாறான உதவிகளை இலங்கை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும் தங்களது நேச கரத்தினை இலங்கைக்கு நீட்டியிருப்பது இரண்டு நாடுகளுக்குமான பாரம்பரிய உறவை சிறப்பித்துக் காட்டுவதுடன் எதிர்கால இலங்கை இந்திய உறவிலும் பாரிய நெருக்கத்தையும் இராஜதந்திர ரீதியிலான பரஸ்பர பரிமாற்றங்களையும் இன்னும் இன்னும் மேம்படுத்தும் எனவும் உறுதியாக நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளதுடன் இந்த மனிதாபிமான உதவிக்காக இலங்கை எப்பொழுதும் நன்றியுடன் இருக்குமெனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் இது இராஜதந்திர ரீதியிலான பல முன்னேற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் எனவும் உறுதியாக நம்புகிறேன் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top