பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா

🕔 February 28, 2022

– அஹமட் –

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

இதற்கான கடிதத்தை, இன்று (28) அவர் பிரதேச சபை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட குறித்த கடிதத்தில்; பொத்துவில் – ஹிதாயாபுரம் வட்டாரத்துக்கான பிரதேச சபை உறுப்பினர் பதவியை இன்று 28ஆம் திகதி ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இரண்டு முறை பொதுத்துவில் பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த வாஸீத், அதற்கு முன்னர் பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இம்முறை நடந்த தேர்தலிலும் பொத்துவில் பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றியமையினை அடுத்து, வாஸீத் தவிசாளரானார். இந்த நிலையில், அவரின் கட்சியைச் சேர்ந்த பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எச். ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து, வாஸீத்தை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கியதோடு, அந்த இடத்தைத் தனதாக்கிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தவிசாளர் பதவியை இழந்த வாஸீத், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கம் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

Comments

Face Book