குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

🕔 February 28, 2022

– முன்ஸிப் –

ம்பாறை மாவட்டம் – சங்கமன் கிராம குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள மலைகளை வெடி வைத்து உடைப்பதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும், அதனால் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோரி, இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

சங்கமன் கிராமம், தாண்டியடி மற்றும் சங்கமன் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த பகுதியில் கருங்கல்லைப் பெற்றுக் கொள்வதற்காக, மலைகள் வெடி வைத்து உடைக்கப்பட்டு வருகின்றன என்றும் அவற்றில் இரண்டு மலைகள் அங்குள்ள பயிர்ச் சேனைகள், கிறிஸ்தவ ஆலயம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ளன என்றும், இதனால் மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதேவேளை, “மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் இவ்வாறு மலைகளுக்கு வெடி வைப்பதற்கான அனுமதியை அதிகாரிகள் எவ்வாறு வழங்க முடியும்” எனவும் மக்கள் கேள்வியெழுப்பினர்.

குடியிருப்புகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதனால், மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதை தெரியப்படுத்தியும், மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்தச் செய்யுமாறு கோரியும், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களும் திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் தமது பகுதியிலுள்ள மலைகளுக்கு வெடி வைக்கும் நடவடிக்கைகளுக்கு, மக்கள் தமது எதிப்பினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, எதிர்ப்புக்காட்டியவர்களுக்கு எதிராக, மலையை உடைப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளவர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைய பதிவு செய்தார்.

இதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம், புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அம்பாறை அலுவலகப் பொறியியலாளருக்கு கடிமொன்றை எழுதிய திருக்கோவில் பிரதேச செயலாளர்; ‘பிரதேச மக்களுக்கும் மலை உடைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும்வரை’, அங்கு மலைகளை உடைப்பதற்கான அனுமதியை தற்காலிகமாக ரத்துச் செய்யுமாறு கோரியிருந்தார்.

ஆயினும், அதற்கு சாதகமான பதில் உரிய தரப்பிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் வெடி வைத்து மலைகளை உடைக்கும் வேலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே, தமது பகுதியை அண்டியுள்ள மலைகளை வெடி வைத்து உடைக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Face Book