“ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா”; ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ரஞ்சன் பதில்

🕔 February 28, 2022

“மன்னிப்பு கோர மாட்டேன்” என நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (28) சாட்சியமளிக்க அழைத்து வரப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்களை பார்த்து இதனை கூறியுள்ளார்.

“ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்குமா, நீங்கள் அதனை எதிர்பார்க்கின்றீர்களா” என சிறைச்சாலை பேருந்தில் இருந்த ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டனர்.

அதற்கு, தெரியவில்லை என தலையை அசைத்தும் கைகளை விரித்தும் பதிலளித்துடன், “மன்னிப்பு கோர மாட்டேன்” எனவும் கூறினார்.

முன்னதாக பேருந்தில் ஏறும் போது; “நலமாக இருக்கின்றீர்களாக” என ஊடகவியலாளர்கள் ரஞ்சனிடம் கேட்டனர்.

அதற்கு “நலமாக இருக்கின்றேன்” எனப் பதிலளித்த அவர்; “நீங்கள் நலமா” எனவும் கேட்டார். அத்துடன் தன்னால் பேச முடியாது , பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாலரை ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெலிகடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

Face Book