கட்சி சொல்வது போல் 19ஆம் திகதி நடக்கவில்லை என்றால், எம்.பிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 April 16, 2022

புதிய பிரதி சபாநாயககரைத் தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெறும் போது, எதிர்க் கட்சியினர் பிரேரிப்பவருக்கு ஆதரவாக மு.காங்கிரஸ் எம்.பிகள் வாக்களிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடந்து கொள்ளாது விட்டால், அவர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் சம்மாந்துறையில் வைத்து நேற்று (15) இரவு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பிரதி சபாநாகர் ராஜிநாமா செய்துள்ளார். ஏற்கனவே நாடாளுமன்றில் 04 குழுக்கள் சுயாதீமான செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளன. இதில் ஐந்தாவது குழுவாக குறைந்த பட்சம் எங்களின் ஆட்கள் (முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) சேர்ந்து கொள்வார்களோ தெரியாது.

ஆனாலும் தாங்கள் இன்னும் கட்சியுடன் இருப்பதாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியவுடன் புதிய பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புத்தான் முதலில் நடக்க வேண்டும். அந்த வகையில் அன்று காலை ஒரு பலப் பரீட்சை நடக்கும்.

அந்தப் பலப் பரீட்சையானது முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான பலப் பரீட்சையாகவும் இருக்கப் போகிறது.

எனவே அன்றைய தினம் தவறாமல், பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என, குறுஞ் செய்தி ஊடாக மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளோம். அவர்கள் கட்சியிலிருந்து இதுவரை விலக்கப்படவில்லை. கட்சிப் பதவிகளில் இருந்தே விலக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்கள் கட்சி சொல்வது போல், எதிர்க் கட்சியினர் புதிய பிரதி சபாநாயகராக பிரேரிக்கிறவருக்கு வாக்களிக்க வேண்டும் என, அவர்களுக்கு நாம் உத்தரவிட்டுள்ளோம்.

இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஏற்கனவே, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், வரவு – செலவுத் திட்டம் உள்ளிட்ட பலவற்றுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதன்போது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக ஹக்கீம் அறிவித்து விட்டு, பின்னர் அவர்களை மன்னித் விட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Face Book