சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்குமாறு ஆலோசனை

🕔 May 23, 2022

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான விசாரணைகளில், தேவையற்ற தலையீடுகள் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் இந்த இடமாற்றத்தை சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் சம்பவத்தின் போது தேசபந்து காணப்பட்டார். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பரவலான அமைதியின்மைக்கு வழிவகுத்தது.

தாக்குதல்களை தடுக்கும் வகையில் பொதுஜன பெரமுனவின் விசுவாசிகள் மீது கண்ணீர் புகை அல்லது தண்ணீர் பீரங்கிகளை பிரயோகிக்க வேண்டாம் என, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமக்கு பணிப்புரை விடுத்ததாக, ஜனாதிபதிக்கு தென்னகோன் கூறியதாக, அமைச்சர் ரமேஷ் பத்திரன நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் தாக்குதல்கள் தொடர்பில், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

Comments

Face Book