அருந்திக எம்.பி ஒருபோதும் விமானியாக பணியாற்றியதில்லை: ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெரிவிப்பு

🕔 May 23, 2022

லங்கை விமானப்படையிலும், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இலும் – தான் விமானியாக பணியாற்றியதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெனாண்டோ – நாடாளுமன்றில் தெரிவித்தமையை, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் (Airline Pilots’ Guild of Sri Lanka) மறுத்துள்ளது.

பொதுஜன பெரமுன நாடாளுமுன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, ஒருபோதும் விமானியாக பணியாற்றியதில்லை என்றும், அவர் விமானியாக பணியாற்றியதாக நாடாளுமன்றத்தில் கூறிய தகவலை தாம் மறுப்பதாகவும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘தேசிய விமான சேவைகளின் விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு அமைப்பாக – ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம்தான் உள்ளது. எமது சங்கத்தில் அருந்திக பெர்னாண்டோ ஒரு விமானியாக இருந்ததாக கூறியதை நாம் முற்றாக மறுக்கிறோம்.

எமது அறிவுக்கு எட்டிய வரையில், தேசிய விமான சேவையில் அவர் ஒரு விமானியாக இருந்தமைக்கான எந்தவிதப் பதிவுகளும் இல்லை’ என, அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய அருந்திக பெர்னாண்டோ, விமானப் படையிலும், ஏர்லைன்ஸ் இலும் தான் விமானியாக பணியாற்றியதாக கூறியிருந்தார்.

“சமீபத்திய வன்முறைகளில் எனது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டு அங்கிருந்த ஆவனங்களும் சேதமாக்கப்பட்டன. நான் விமானப் படையிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இலும் விமானியாகப் பணியாற்றியமைக்கான ஆவணங்களும் அவற்றில் அடங்கும். ஆனால் இப்போது விமானப் படையிலும் ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸிலும் நான் பணியாற்றியதைக் காட்ட இப்போது எதுவும் இல்லை. ஒரு விமானம் புறப்படும்போது, அந்தக் காலத்தில் கணினி மயமாக்கல் வசதி இல்லாததால் அவை பதிவேடுகளில் குறிக்கப்பட்டன. அந்த பதிவுகள் அனைத்தும் எனது வீடு எரிக்கப்பட்டதால் அழிந்து விட்டன” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இலங்கை விமானப் படையை தொடர்புகொண்டு டெய்லி மிரர் பத்திரிகை 21ஆம் தேதி இது குறித்து விசாரித்தபோது; “விமானப் படையில் அருந்திக பெர்னாண்டோ பணியாற்றவில்லை” என்று, விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் துஷான் விஜேசிங்க கூறியதாக, அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, தான் விமானியாக பணியாற்றியதாக அருந்திக எம்.பி கூறியமையை, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கமும் இன்று மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: விமானப் படையில் அருந்திக எம்.பி பணியாற்றவில்லை: நாடாளுமன்றில் பொய் கூறினாரா?

Comments

Face Book