ஆஸி.யின் சுழல் பந்துவீச்சில் சரிந்த இலங்கைக்கு படுதோல்வி!

🕔 July 3, 2022

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

அவுஸ்திரேலிய அணியானது நேற்றைய ஆட்டநேர நிறைவில் 313 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய தினம் களமிறங்கியதுடன், தங்களுடைய கடைசி 2 விக்கெட்டுகளையும் 8 ஓட்டங்களுக்குள் இழந்தது.

இதன்காரணமாக 321 ஓட்டங்களுக்கு தங்களுடைய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலிய அணியானது 109 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணிசார்பில் அதிகபட்சமாக கிரிஸ் கிரீன் 77 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட முன்னிலையை வேகமாக கடப்பதற்கு முற்பட்ட இலங்கை அணியானது ஆரம்பத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக திமுத் கருணாரத்ன மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்தனர்.

முதல் விக்கெட் 37 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, அதனைத்தொடர்ந்து இலங்கை அணியானது தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது. குறிப்பாக வேகமாக ஓட்டங்களை குவிக்கும் முயற்சியிலிருந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தேவையில்லாத துடுப்பாட்டங்களை கையாண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

குறிப்பாக இன்றைய தினம் நெதன் லையோனின் பந்துவீச்சுக்கு மாத்திரம் அல்லாமல் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரான டிராவிஷ் ஹெட்டின் பந்துவீச்சுக்கும் தடுமாறிய இலங்கை அணியானது வெறும் 22.5 ஓவர்கள் மாத்திரமே துடுப்பெடுத்தாடியதுடன், 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக திமுத் கருணாரத்ன 23 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் நெதன் லையோன் 4 விக்கெட்டுகளையும், டிராவிஷ் ஹெட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதில் டிராவிஷ் ஹெட் தன்னுடைய கன்னி டெஸ்ட் விக்கெட்டினை பதிவுசெய்திருந்தது மாத்திரமின்றி, 2.5 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களுக்கு இந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வரலாற்றை பொருத்தவரை குறைந்த பந்துகளுக்கு (137) தங்களுடைய அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி இன்று இழந்து மோசமான சாதனையை பதிவுசெய்ததுடன், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையையும் இன்று (01) பதிவுசெய்திருந்தது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 5 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில், ரமேஷ் மெண்டிஸின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் பௌண்டரியை விளாசி டேவிட் வோர்னர் போட்டியை நிறைவுசெய்தார். அதன்படி அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற முன்னிலையை பெற்றுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 8ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Face Book